Tuesday 26 April 2011

சிறந்த படம் மைனா ; நார்வே விருதுகள் அறிவிப்பு!

நார்வே சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படமாக பிரபு சாலமன் இயக்கிய மைனா தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநராக பயணம் படத்துக்காக ராதாமோகனும், சிறந்த நடிகராக விதார்த்தும் (மைனா), நடிகையாக அஞ்சலியும் (அங்காடி தெரு) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் படம் நான்கு விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த உடையலங்காரம், சிறந்த கலை இயக்கம், சிறந்த இசை, சிறந்த பாடல் என நான்கு பிரிவுகளில் இந்தப் படம் விருதுகளை வென்றுள்ளது.

நார்வே சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா கடந்த 20ம்தேதி ஆஸ்லோவில் தொடங்கி 25ம்தேதி வரை நடந்தது. வசீகரன் சிவலிங்கம் என்ற நார்வே தமிழரின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனத்தின் அயராத முயற்சியால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த திரைப்பட விழா ஆஸ்லோவில் நடந்தது. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமே சர்வதேச அளவில் நடக்கும் ஒரே திரைப்பட விழா இதுதான். இந்த விழாவில் தமிழின் முன்னணி இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்றனர்.

இயக்குநர்கள் ராதாமோகன், பிரபு சாலமன், வெற்றிமாறன், சீனு ராமசாமி, சந்தோஷ், விஜய், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில் மதராசபட்டினம், மைனா, பயணம் உள்ளிட்ட 15 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவை தவிர 10 தமிழ் குறும்படங்களும் திரையிடப்பட்டன.

விழாவின்போது விருது பெறும் படங்கள் அறிவிக்கப்பட்டன. 6 நாட்கள் நடந்த திரைப்பட விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் மற்றும் நடுவர்களின் வாக்குகளின் அடிப்படையில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

சிறந்த உடை அலங்காரம் - தீபாலி நூர் (மதராசபட்டினம்)
சிறந்த கலை இயக்கம் - செல்வகுமார் (மதராசபட்டினம்)
சிறந்த ஒரிஜினல் இசை - ஜிவி பிரகாஷ்குமார் (மதராசபட்டினம்)
சிறந்த பாடல் - மதராசபட்டினம் (பூக்கள் பூக்கும் தருணம்...)
சிறந்த பாடலாசிரியர் - நா முத்துக்குமார்
சிறந்த சண்டை: ஆக்ஷன் பிரகாஷ் (யுத்தம் செய்)ஞ
சிறந்த எடிட்டிங்: ஆன்டனி (விண்ணைத்தாண்டி வருவாயா)
சிறந்த ஒளிப்பதிவு - சுகுமார் (மைனா)
சிறந்த செய்திப் படம் - எல்லாளன் (இயக்குநர்: சந்தோஷ்)
சிறந்த துணை நடிகை - சரண்யா (தென்மேற்கு பருவக் காற்று)
சிறந்த துணை நடிகர் - தம்பி ராமையா (மைனா)
சிறந்த திரைக்கதை - தென்மேற்கு பருவக் காற்று (சீனு ராமசாமி)
சிறந்த புதுமுக ஹீரோ - ஹரீஷ் (தா)
சிறந்த நடிகை - அஞ்சலி (அங்காடித் தெரு)
சிறந்த நடிகர் - விதார்த் (மைனா)
சிறந்த இயக்குநர் - ராதா மோகன் (பயணம்)
சிறந்த படம் - மைனா
நள்ளிரவு சூரியன் விருது - பயணம்

No comments:

Post a Comment